அரசு மருத்துவமனையில் கத்திரிக்கோலை சிறுவன் சுத்தம் செய்ததால் பரபரப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கருவியை சிறுவன் சுத்தம் செய்த சம்பவத்தால் பரபரப்பு உண்டாகியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஏழை எளிய பொதுமக்கள் பல்வேறு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர் பற்றாக்குறை மேலும் சுகாதார சீர்கேடு என தொடர்ந்து அவல நிலைக்கு உள்ளாகி வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், உள்ளிட்டோர் தொடர்ந்து மூன்று மணி நேரம் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சுகாதார சீர்கேட்டை சரி செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த கத்திரிக்கோல் மற்றும் கத்தியை சிறுவன் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மருத்துவமனையில் விசாரணை மேற் கொண்ட போது தூத்துக்குடி சோட்டையின் தோப்பு பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் சர்க்கரை நோய் காரணமாக காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்தாவது தளத்தில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்ந்துள்ளார். அவரது காலில் இருந்த ஒரு விரல் அகற்றப்பட்டு தொடர்ந்து ஐந்தாவது மாடியில் சிகிச்சையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி நோயாளி பவுல் ராஜிக்கு அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழைய கட்டை அவிழ்த்துவிட்டு புதிய கட்டு போடக்கூடிய பணியை செய்துள்ளனர்.
அப்போது பயன்படுத்திய கத்தரி மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளை பவுல்ராஜின் படுக்கை அருகே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து ரத்தம் தோய்ந்த அந்த கத்திகளை பவுல்ராஜ் தனது மகனை விட்டு சுத்தம் செய்ய சொன்னதாக சிறுவனின் தந்தை தெரிவித்தார். கழிவறைக்கு சென்று கத்திரிக்கோல் சுத்தம் செய்ய நிலையில் சிறுவன் சுத்தம் செய்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஐந்தாவது தளத்திற்கு சென்று சம்பவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சிவக்குமார் கூறுகையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தவறுதலாக நடந்து விட்டு இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காது இந்த தவறு குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து அரங்கேறி வரும் அவலம் அங்கு வரும் சாதாரண ஏழை எளிய மக்களை மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது மேலும் இங்கு பணிபுரியும் சில மருத்துவ அதிகாரிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலேயே பணிபுரிவதால் புதியதாக வரக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் சரியாக செயல்பட முடியவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
