திருமாவளவன் மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை: எச்.ராஜா
h.raja
திருமாவளவன் மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை என தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், நேற்று திருமாவளவன், முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன், அக்டோபர் 2 மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். அதனை எதிர்பார்க்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. இதனால் அக்டோபர் 2 மாநாடே மக்களை ஏமாற்றுகிற செயல். இன்று மாநில அரசு 500 கடைகளை மூடி உள்ளது என கூறி உள்ளது. ஆனால் 1000 கிளப்களை திறந்துள்ளீர்கள். இது எல்லாவிதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும். தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே. அதற்கு சமீபத்திய உதாரணம் பீகார் மாநிலம் ஆகும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. சேருமா என்றால் அதற்கு நான் பதில் அளிக்க முடியாது. எங்கள் கூட்டணியில் இப்போது பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை உள்ளன. கூட்டணியில் அ.தி.மு.க.வை சேர்ப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார் என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றி கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னை பற்றி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற தகுதி இல்லாதவர். நான் காலாவாதியாகிவிட்டேன் என கூறியிருக்கிறார். அவர் என்னைவிட 15 வயது மூத்தவர். எனக்கு 67 வயது ஆகிறது. அவர் மகன் இறந்ததால் தற்போது சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார். அவர் இதுபோன்று பேசினால் அரசியலில் இருந்து காலாவதியாகி விடுவார். ராகுல்காந்தி பற்றிய நான் தெரிவித்த கருத்துக்காக கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். நான் உண்மையை தான் பேசி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.