ஊரைச் சுமந்த முதியவர் மறைவு - நிராசையான கனவு : மீனாட்சிபுரம் மனிதர்களால் நிறைவது எப்போது?

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே முதியவரும் இறந்ததால் ஆள் இல்லாத கிராமமாக மாறியது.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் கிராமம் தனி வருவாய் கிராமமாக செயல்பட்டு வந்த மீனாட்சிபுரம் கிராமம் அருகே உள்ள செக்காரக்குடி நடுச்செக்காரக்குடி சொக்கலிங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு தாய் கிராமமாக செயல்பட்டு வந்துள்ளது. அரசு கையேடுகளிலும் இவ்வாறு இருந்து வந்துள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் செக்காரக்குடி இரண்டு என மாற்றப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்துள்ளன மேலும் ஒரு சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர். விவசாயத்தில் செல்வ செழிப்புடன் இருந்த இந்த கிராமம். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகே பொதுப்பணித்துறை சார்பில் ஒரு குளம் அமைக்கப்பட்டது இதன் காரணமாக அந்த கிராமத்திற்கு வந்த கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைபட்டதால் அந்த கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மேலும் மின் வசதி சாலை வசதி ஆகியவை இல்லாத காரணத்தினாலும் குடிநீருக்காக நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது‌. இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு குடும்பமாக காலி செய்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேர துவங்கினர். மேலும் இந்த கிராமத்தில் பஞ்சாயத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறையில் ஒரு பெண் தீ குளித்து இறந்தது. இதைத் தொடர்ந்து குளத்தில் விழுந்து ஒரு பெண்கள் மர்மமான முறையில் இறந்த காரணத்தினால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டு அதன் காரணமாகவும் அந்த கிராமத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராமத்தில் கந்தசாமி என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமியின் மனைவி இறந்துவிட கந்தசாமி மட்டும் தனது கிராமத்தில் மீண்டும் தனது கிராமம் பழைய நிலைமை ஆகும் என்ற வைராக்கியத்துடன் தான் இந்த கிராமத்தை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என உறுதியாக இருந்து அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரும் வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார் இதைத் தொடர்ந்து அந்த கிராமம் ஆள் இல்லாத கிராமமாக மாறி உள்ளது.

மேலும் இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் வசித்து வந்த தற்போது கேரளாவில் வசித்து வரும் ஒருவர் மீனாட்சிபுரம் கிராமத்தில் கோவில் கட்டினால் ஆவது அந்த கிராமத்தில் இருந்து வெளியே சென்று வசிக்கத் துவங்கிய கிராம மக்கள் மீண்டும் கிராமத்திற்கு வந்து குடியேறுவர்கள் என நினைத்து ரூபாய் 50 லட்சம் ரூபாய் செலவில் பெருமாள் கோவில் ஒன்றை கட்டியுள்ளார் ஆனால் அந்த கோயிலும் தற்போது மூடியே கிடக்கிறது அங்கே உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு மட்டும் வாரத்தில் ஒரு முறை ஒருவர் வந்து குறி சொல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த கிராமத்தில் மாடு வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இங்கே கட்டி வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் பாலடைந்து உள்ளது மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு உள்ளதால் மின் கணக்கெடுக்கும் கருவி இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம் என்பதால் மின்சார வாரியம் இதுவரை மின் இணைப்பு ஜெபிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து பள்ளி பராமரிப்பின்றி புதர் போல் காட்சியளிக்கிறது மேலும் பள்ளியில் உள்ள பலகையில் 2013 ஆம் ஆண்டு பள்ளி பாடம் நடத்தியதற்கான பலகையில் எழுதப்பட்டுள்ளது.

ஆளில்லாத இந்த கிராமத்திற்கு தற்போது சில மாதங்களுக்கு முன்பு அரசு சார்பில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் செலவில் சாலை அந்த கிராமம் வரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து வசதி இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை . எனவே ஆளில்லாத மீனாட்சிபுரம் கிராமத்தில் உரிய அடிப்படை வசதிகளை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்தால் மேலும் தங்களுக்கு வீடு இல்லாத தங்களை போன்ற ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்தால் தாங்கள் அந்த கிராமத்தில் குடியேற தயாராக உள்ளதாகவும் அந்த கிராமத்தின் அருகே உள்ள கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே ஆளில்லாத கிராமத்தில் மீண்டும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து கிராம மக்களை குடிபெயர செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story