மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள்-அமைச்சர் எ.வ.வேலு

மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள்-அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள் என அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் நடந்த திமுக கூட்டத்தில் பேசினார் .

திருவண்ணாமலை அருகில் உள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் வடக்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 13 மாவட்டங்களை சேர்ந்த திமுக முகவர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு முன்னிலை வகித்து வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 கோடி தமிழர்களின் இதயவேந்தராக விளங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதற்கு காரணம் புறநானூற்று பாடலில் கூறியிருப்பதை போல, சேட்டு சென்னியன் என்ற மன்னன், தான் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றான். அதைப்போல சோழர் குலத்தில் வந்த என் நெஞ்சம் நிறைந்த கலைஞரின் புதல்வர் முதல்-அமைச்சர் தளபதி நின்ற இடம் எல்லாம் வெற்றிவாகை சூடி வந்திருக்கிறார். உதாரணமாக 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 23 உறுப்பினர்களோடு சட்டமன்றத்திற்கு நாங்கள் சென்றோம். 2016-ல் தமிழக வரலாற்றிலேயே 89 உறுப்பினர்களோடு சட்டமன்றத்திற்குள் நுழைந்தோம். 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றோம். 2021-ல் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற ஒற்றை வரிகள் மூலம் 165 உறுப்பினர்கள் வெற்றி பெற்று 6-வது முறையாக தி.மு.க. ஆட்சி அரியணையில் ஏறியது. "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற ஒற்றை தாரக மந்திரம் முதன்முதலாக தொடங்கப்பட்ட மண்தான் திருவண்ணாமலை. காமராசரை, நான் குறைத்து கூறவில்லை. ஆனால் தமிழகத்தை ஆண்ட காமராசர், பேரறிஞர் அண்ணா, ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கருணாநிதி இவர்களையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிகளில் 90 சதவீத வெற்றியும், மாநகராட்சிகளில் 100 சதவீத வெற்றியும் பெற்றோம் என்றால் இந்த வெற்றிக்கு வித்திட்டவர் நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். மன்னன் சேட்டு சென்னியன் போல இவர் சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடி வந்திருக்கிறார். முகவரி இல்லாமல் போவார்கள் "என்னை முன் வெல்லான்" என்ற திருக்குறள் சொல்வதைப் போல ஒரு போர் வீரன் சொன்னான். எதிரிகளே என் தலைவனை எதிர்க்காதீர்கள். எதிர்த்தால் நீங்கள் வெற்றியை இழந்து நடு கல்லாகதான் போவீர்கள் என்று சொன்னதை போல இங்கே கூடியிருக்கிற 12 ஆயிரத்து 433 செயல் முகவர்கள் சார்பாக சொல்கிறேன். உங்களை (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்) எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே ஆணையிடுங்கள். உங்கள் ஆணையை ஏற்று செயல்பட காத்திருக்கிறோம். மேற்கண்டவாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story