திருக்கோவிலூா் தாலுக்கா விழுப்புரம் மாவட்டத்தில் இணைப்பா?
திருக்கோவிலூா் தாலுக்கா விழுப்புரம் மாவட்டத்தில் இணைப்பா?
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோதே திருக்கோவிலூர் என்ற தாலுக்கா இருந்து வந்தது. இந்த தாலுகாவின் தலை நகர் தமிழகத்திலேயே பெயர் சொல்லக் கூடிய புராதான நகரமாகவும், ஆண்மீக நகரமாகவும் அளவிற்கு சிறந்து விளங்கியது. இதில் திருவெண்ணைநல்லூர், சித்தலிங்கமடம், திருக்கோவிலூர், முகையூர், அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை, திருப்பாலபந்தல் ஆகிய ஏழு குருவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வந்தது. தற்போது மாவட்ட தலைநகரமாக இருக்க கூடிய விழுப்புரத்திற்கு 1993 ஆண்டு வரையில் தலைமை இடமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் 2009 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திருக்கோவிலூரின் சில பகுதியை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியாகவும் மீதமுள்ள சில பகுதியை விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும் சேர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் அப்போது முதல் 2019வரை நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றது.
பின்னர் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூரில் இருந்து அரகண்டநல்லூர், முகையூர் ஆகிய இரு குறு வட்டங்களை பிரித்து கண்டாச்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு தாலுகா 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது .அதன் பின்னர் திருக்கோவிலூரில் இருந்து திருவெண்ணைநல்லூர்,சித்தலிங்கமடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து அரசூர் குறுவட்டங்களை பிரித்து திருவெண்ணெய் நல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்காவும் உருவாக்கப்பட்டது. திருக்கோவிலூர், திருப்பாலப்பந்தல், மணலூர்பேட்டை, ஆவி.கொளப்பாக்கம், குலதீபமங்கலம் ஆகிய இரு குறுவட்டங்களை புதிதாக உருவாக்கி திருக்கோவிலூர் தாலுகாவிலேயே செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் திருக்கோவிலூர் தாலுக்காவில் இருந்த மணலூர்பேட்டை, திருப்பாலபந்தல் குறுவட்டங்களில் சில கிராமங்களை எடுத்து வாணாபுரம் என்ற ஒரு புதிய தாலுகாவை உருவாக்கி அதனுடன் இணைத்தனர். திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் திருக்கோவிலூர் வட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிகளையும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இன்னும் நீடித்து வருகிறது. அதோடு 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் திருக்கோவிலூர் தாலுக்கா சென்றது.
இதில் இப்பகுதி மக்களுக்கு இது நாள் வரை எந்த ஒரு அடிப்படை வசதியையும், நிர்வாக ரீதியிலான வசதியையும் போதிய வசதி ஏற்படவில்லை மாவட்ட தலைநகருக்கு சென்று வர இன்று வரை எவ்வித போக்குவரத்து வசதியும் செய்து தரப்படவில்லை. மொத்தத்தில் திருக்கோவிலூர் மக்கள் துண்டாடப்பட்டனர். ஒரு சில அலுவலகங்களை தவிர இன்னும் பிற அலுவலகங்களின் தேவைக்காக பொதுமக்கள் இன்று வரை விழுப்புரத்திற்கு தான் சென்று வருகின்றனர். இதனால் திருக்கோவிலூர் பகுதி மக்கள் திரிசங்கு சொர்க்கம் போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
திருக்கோவிலூர் பொதுமக்கள் தங்கள் பகுதியை விழுப்புரம் மாவட்டத்திலேயே இணைக்க கோரி சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் அதிகாரிகளிடமும் நேரடியாகவும் மனுவாகவும் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை பலன் அளிக்கவில்லை. திருக்கோவிலூர் வட்டத்தில் தேவியகரம் என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி திருக்கோவிலூர் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ளதுடன் இதன் வருவாய் தேவியகரம் ஊராட்சிக்கும் திருக்கோவிலூர் நகராட்சிக்கும் செல்கிறது. இதனை பல ஆண்டுகளாக முறைப்படுத்தாமல் அப்படியே விட்டுள்ளனர்.
இதனிடையே புதிதாக உருவாக்கப்பட்ட கண்டாச்சிபுரம் தாலுகாவை நீக்கிவிட்டு அங்குள்ள பகுதிகளை திருக்கோவிலூர் தாலுகாவில் இணைக்கவும் திருக்கோவிலூர் தாலுகாவை தொகுதியின் அடிப்படையில் பிரித்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கவும், தற்போது திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள ஜி.அரியூரில் புதிய குறுவட்டம் உருவாக்கி அதனை உளுந்தூர்பேட்டையில் இருந்து பிரிக்கப்படும் எலவானசூர்கோட்டை வட்டத்திலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இணைக்கவும், தற்போது அரசூர் குறு வட்டத்தை உளுந்தூர்பேட்டை தாலுகாவிலும் தாலுகாவில் இணைக்கவும் எல்லை வரையறை செய்து அதன் கருத்துருக்கள் அதற்கான பூர்வாங்க பணிகளை விழுப்புரம் கள்ளக்குறிச்சி இரு மாவட்ட அதிகாரிகளும் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கண்டாச்சிபுரம் தாலுக்கா உருவாக்கி சுமார் 10 வருடங்கள் ஆகியும் அங்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலில், அப்பகுதி மக்கள் தங்களுக்கு தாலுகா அந்தஸ்து தேவை இல்லை என்ற முடிவை வரவேற்கின்றனர்.
திருக்கோவிலூர் தாலுகாவும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைவதற்கு இப்பகுதி மக்களும் வரவேற்கின்றனர். தாலுக்கா பிரிப்பு நடவடிக்கையால் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியமும், காவல் உட்கோட்ட அலுவலகமும் எந்த மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். சட்டமன்ற தொகுதி ரீதியாகவும் நாடாளுமன்ற தொகுதி ரீதியாகவும் முறையான பொதுமக்களுக்கு நிர்வாக ரீதியாகவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாத அளவிற்கு திருக்கோவிலூர் தாலுகாவிற்கு தேவையான வருவாய் கிராமங்களை அதனுடன் இணைத்து திருக்கோவிலூரை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஏனென்றால் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் முதல் சிறப்பு வாய்ந்த திருக்கோவிலூர் நகரம் இன்றைக்கு ஏதோ ஒரு தனி தீவு போலவே தோற்றம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தாலுகா அறிவித்தது ஒன்றியங்களை பிரித்தது, சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளை பிரித்தது பொது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளையும் பொது மக்களை கருத்துக்களை கேட்ட பின் தாலுகாவை பிரிப்பது மாவட்டத்தை பிரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.