மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!!
Tn govt
மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளை முடங்கி உள்ளனர். இந்நிலையில், மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்துக்கு ராஜேந்திரன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.