திருவள்ளுவர் சிலைக்கு இன்று 23வது ஆண்டு விழா
கன்னியாகுமரியில் எழுப்பப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின், 23வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பூக்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சிலையை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1- ம் தேதி அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவிய 23வது ஆண்டையொட்டி குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து பூம்புகார் படகு துறையில் இருந்து தனி படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று சிலையின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை என்பது குறிப்பிட தகுந்ததாகும்.