தொடர் விடுமுறை : ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பிளஸ்-1, பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என அனைத்து தேர்வுகளும் நிறைவுற்ற நிலையில் ரம்ஜான் பண்டிகையொட்டி தொடர் விடுமுறை வந்தது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக நடு இரவு நேரத்தில் லேசான மழை பெய்வதால் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குளுகுளு காலநிலை நிலவுகிறது. கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவுவாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது. கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான ரகங்களை சேர்ந்த பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் பூத்துக் குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேல்பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் பல வகையான கள்ளி செடிகளை பார்வையிட்டனர்.

நேற்று பூங்கா புல்வெளியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று அனுமதி கொடுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி பொழுதை கழித்தனர். குதிரை சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர். குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்பட பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. ஊட்டி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சுற்று பேருந்துகளிலும் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். இதேபோல் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பியதால் அறைகள் கிடைக்காமல் சிலர் கஷ்டப்பட்டனர். ஒரு சிலர் அதிக வாடகை காரணமாக கார்களில் சொந்த ஊர் திரும்பி விட்டனர். மேலும் உள்ளூர் வியாபாரம் சிறப்பாக இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் மட்டும் உள்ளூர் மக்களுக்கும் போலீஸாருக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.

Tags

Next Story