ஐரோப்பிய மாணவர்களுக்குத் தமிழ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

ஐரோப்பிய மாணவர்களுக்குத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐரோப்பாவைச் சேர்ந்த முனைவர் பட்ட நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பேச்சுத்தமிழ்ப் பயிற்சி மற்றும் பண்பாட்டுப் பயிலரங்கினை எதிர்வரும் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் முதல் இருபது நாட்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தெற்காசிய கல்வி மையமும் கையெழுத்திட்டுள்ளன.

ஐரோப்பாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் பலருக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள தெற்காசிய கல்வி மையம் வாயிலாகத் தமிழ்மொழியில் பேசும், எழுதும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் பேச்சுத்தமிழை முறையாகப் பயிலும் வகையில் ஐரோப்பாவைச் சேர்ந்த வேவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தங்கி இப்பயிற்சிகளை எடுக்கவுள்ளதாக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார்.

வகுப்பறை சார்ந்தும், வகுப்பறைக்கு வெளியில் பொதுவிடங்களிலும் என வித்தியாசமான முறையில் இப்பேச்சுத்தமிழ்ப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார். மேலும் தமிழ்ப் பண்பாட்டுப் பயிற்சிகளும் உடன் வழங்கப்பட உள்ளதாகவும், இந்நிகழ்வை அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை மற்றும் சமூக அறிவியல் துறை இணைந்து ஒருங்கிணைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெற்காசிய கல்வி மையத்தைச் சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் ஸோயி ஹெட்லி, புதுவை பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தின் இயக்குநர் திருமதி பிளாண்டின் ரிபெர்ட் ஆகியோர் கையொப்பமிட்டனர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் இளையாப்பிள்ளை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளித் தலைவர் முனைவர் ச.கவிதா, சமூக அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சங்கீதா மற்றும் அலுவல் நிலைப் பணியாளர் கார்த்திகேயன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story