ஆந்திராவில் சிக்கித்தவிக்கும் கல்குவாரி தொழிலாளர்கள் - மீட்டுத்தரக்கோரி டிஎஸ்பியிடம் மனு
தொழிலாளர்களின் குடும்பத்தினர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மனைவி காளியம்பாள்(50) மற்றும் உறவினர்கள் வந்தவாசி டிஎஸ்பி ராஜியிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கல் உடைக்கும் தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த எனது கணவர் சந்திரசேகர், மகன் ராமன் (25), மருமகன் ராம கிருஷ்ணன் (30) ஆகியோர், ஆந்திர மாநிலம், சித்தூர்மாவட்டம், மதனப்பள்ளி பகுதியில் உள்ள வேணு என்பவரின் கல் குவாரி யில் கல் உடைக்கும் கூலி தொழில் செய்து வருகின்றனர். மாதம் இருமுறை வீட்டுக்கு வந்து செல்லும் இவர் கள் கடந்த 45 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. எனவே, செல்போன் மூலம் தொடர்புகொண்டு கேட்டதற்கு குவாரி உரிமையாளர் அனுப்பாமல் உள்ளார் என கடந்த 10 தினங்களுக்கு முன்பு கணவர் சந்திரசேகர் கூறினார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. இந்நிலையில், நேற்று காலை எனது மகள் தெய்வானைக்கு அவரது கணவர் ராமகிருஷ்ணன் போன் செய்தார். அப்போது. தங்களை ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் ரூ .1 லட்சம் கொடுத்தால் தான் குவாரியில் இருந்து வெளியேற விடுவோம் என குவாரி உரிமையாளர் வேணு மிரட்டுவதாக கூறியுள்ளார். தொடர்ந்து, அவரது செல்போனை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.