நீலகிரியில் ஆர்வத்துடன் வாக்களித்த பழங்குடியினர்!

நீலகிரி தொகுதியில் கோத்தர் பழங்குடியின பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.

இந்தியாவில் 7 கட்டங்களாகவும், தமிழகத்தில் ஒரே கட்டமாகவும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. வாக்குசாவடி அமைத்தல், வாக்குப்பதிவு இயதிரங்களை தயார் செய்தல் உள்பட பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டம் நிர்வாகம் செய்து வந்தது.

ஊட்டி, குன்னூர், கூடலூர், பவானிசாகர், அவிநாசி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய நீலகிரி தொகுதியில் 1619 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. நீலகிரி தொகுதியில் 14,28,252 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஏற்கனவே கணினி மூலம் சீரற்ற மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு சாவடி மையங்களில் வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் நீலகிரி தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில கிராமங்களில் வாக்களித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் காலை 7மணி முதலே வந்து குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள சூசையப்பர் கல்வியியல் கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மற்றும் மாவட்ட ஆட்சியருமான அருணா வாக்குச் செலுத்தினர். ஊட்டி அருகே உள்ள கோக்கால் மற்றும் கிராமத்தில் கோத்தர் பழங்குடியினர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உடை அணிந்து வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மேலும் தோடர், காட்டுநாயக்கர், இருளர், குரும்பர், பனியர் ஆகிய பழங்குடியின மக்களும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான பந்தல், குடிநீர், சாய்வு தளம், சக்கர நாற்காலி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருதந்தது. இந்நிலையில் 806 பகுதிகளில் உள்ள 1619 வாக்குச்சாவடிகளில் 176 வாக்கு சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்ட அங்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இணைய வழி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மகளிர் மற்றும் மாதிரி வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இதை பார்த்த வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு சில இடங்களில் வனப்பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் வாகனங்களில் வந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் வழக்கத்தை விட இளம் தலைமுறை சேர்ந்த முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருநங்கைகள் கூட்டமாக வந்து வாக்களித்து அனைவரும் வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 5 மணி நிரவர படி 64.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி மாவட்டம் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையிலும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story