தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்
 வேலைநிறுத்தம்  
தமிழக அரசு அண்மையில் அனைத்து வகையான வாகனங்களுக்கான காலாண்டு வரியை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சூழலில் ஏற்கனவே ஆன்லைன் அபராதம், வாகன உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வரும் நிலையில் தற்போது அரசு காலாண்டு வரியை 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. எனவே இதனை கண்டித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று (09.11.23) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடபட உள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் அறிவித்தார். இந்த போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மணல் லாரி உரிமையாளர்கள், வாடகை வாகனங்கள் உரிமையாளர்கள் சங்கம், லாரி பாடி பில்டிங் உரிமையாளர்கள் சங்கம் ஆகியன ஆதரவு அளித்துள்ளன. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் எல்பிஜி டேங்கர் லாரிகள், 55 ஆயிரம் மணல் லாரிகள், 23 லட்சம் இலகு ரக வாகனங்கள் ஆகியவை இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட உள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. லாரி உரிமையாளர்களின் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் 300 கோடி ரூபாய்க்கு வாடகை இழப்பு ஏற்படுவதோடு, 5,000 கோடி மதிப்புள்ள சரக்குகளின் பரிமாற்றத்தில் முடக்கம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே லாரி உரிமையாளர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story