Vijay: TVK முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட உறுதிமொழி - அசத்தும் விஜய்

Vijay: TVK முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட உறுதிமொழி - அசத்தும் விஜய்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன்” என உறுதி அளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள்

Vijay: விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையின் அடிப்படையில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வலம் வரும் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கி அடுத்தக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் அதற்கான பணிகளை தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் செய்து வந்தார். இந்த சூழலில் தனது அரசியல் பயணத்துக்கான சரியான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த விஜய் கடந்த 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவித்தார்.

கட்சியின் சின்னம் மற்றும் கொடி உறுதி செய்யப்படாத நிலையில் அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய்யின் புதிய கட்சியை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் உறுதி செய்ய அண்மையில் புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றிருந்தார். அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வரும் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்த வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தாலும், கட்சி பணிகளில் விஜய்யின் கவனம் சிதறாமல் இருந்ததில் இல்லை. அந்த வகையில் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விஜய்யின் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் உட்கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அஅதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். அதில், “ நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழக மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிககளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

சாதி, மாதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்” என அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் உறுதிமொழி ஏற்றனர்.

இதன்மூலம் சாதி, மத பேதமற்ற அரசியலை விஜய் செய்வார் என அவரது ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.

Tags

Next Story