குட்கா விற்பனை -இருவர் கைது
பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு தேனீர் கடை அருகே குட்கா விற்பதாக வேலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவ்வழியாக ரோந்து சென்ற வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி கடையின் அருகில் நின்றிருந்த இருவரிடம் சோதனை செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதில் அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இருவரும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதில் பீகார் மாநிலம், பாட்னா பகுதியை சேர்ந்த கரீப்ராம் என்பவரது மகன் ஸ்ரீரா ராம் (26), ராஜஸ்தான் மாநிலம், டேடுனுடா பகுதியை சேர்ந்த சங்கர்லால் என்பவரது மகன் ராம் அவ்தார் (34) என்பதும் தெரியவந்தது.
வேலுார் சுற்று வட்டார பகுதியில் வேலை பார்த்து வரும் வெளி மாநில தொழிலாளிகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த வெளி மாநிலத்தை சேர்ந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.