துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி வருகை ரத்து!!
udhayanithi stalin
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி வருகை, வெள்ள பாதிப்புகளால் ரத்ததானது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (5-ந் தேதி) கிருஷ்ணகிரி அருகே நடக்கும், தி.மு.க.வினர் இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதாக இருந்தது. இதற்காக அவரை வரவேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வினர் பேனர்கள், கொடி கம்பங்களுடன், சுவர் விளம்பரங்களை எழுதினர். உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தயார் செய்யும் பணியில், அரசு அலுவலர்களும் ஈடுபட்டு, அரசு சார்பில் முடிவுற்ற பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து அறிக்கைகளும் கேட்கப்பட்டு இருந்தன. தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் 'ஃபெஞ்சல்' புயலால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த, 4 நாளாக மழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மீட்பு பணிகள், வெள்ள பாதிப்புகளை கணக்கிடும் பணி, நிவாரணம் குறித்து அறிக்கைகள் சமர்பிக்கும் பணிகளில், அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், நாளை மறுநாள் (6-ந் தேதி) தருமபுரி மாவட்டத்திற்கும் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்க வாய்ப்பில்லை எனவும், பின்னர் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.