மத்திய அமைச்சர் அமித்ஷா திருமயத்தில் சிறப்பு வழிபாடு!

திருமயம் கோட்டையிலுள்ள குடைவரையான பள்ளி கொண்ட பெருமாள் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதற்காக வாராணசியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு திருச்சி விமானநிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் மாலை 3.30 மணிக்கு திருமயம் வந்தார். திருமயம் கோட்டையில் குடைவரையாக உள்ள பள்ளி கொண்ட பெருமாள், ராஜராஜேஸ்வரி உடனுறை சத்தியகிரீசுவரர் மற்றும் சத்தியமூர்த்தி பெருமாள், வேனுவனேஸ்வரி உடனுறை உமாமகேசுவரர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, திருமயம் கோட்டை பைரவர் கோயிலிலும் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது, அமித்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. அமித்ஷாவுடன் அவரது மனைவி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். முன்னதாக, பிற்பகல் முதலே கோயில் வளாகத்துக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலை 4.15 மணிக்கு சுவாமி தரிசனங்களை முடித்துக் கொண்டு மீண்டும் கார் மூலம் கானாடுகாத்தான் திரும்பினா அங்கிருந்து ஹெலிகாப்டரில்திருச்சி சென்று, விமானம் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார். உள்துறை அமைச்சர் வருகையையொட்டி திருமயம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags

Next Story