இந்தியா வலிமையான நாடாக இருக்க பல்கலை.,கள் தான் காரணம் - மோடி
இந்தியா வலிமையான நாடாக இருக்க பல்கலை.,கள் தான் காரணம் என, திருச்சி பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவ- மாணவிகளுக்கு இன்று (2-1-2024) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 154 கல்லூரிகளைச் சேர்ந்த 2,81,028 மாணவ மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இதில் 30 பேருக்கு மோடி நேரடியாக பட்டங்களை வழங்கினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி விழா பேருரை ஆற்றினார்.
அப்போது அவர் எனது மாணவ குடும்பமே! என்று தமிழில் பேச தொடங்கினார். பின்னர் பிரதமர், பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். 2024ம் ஆண்டு நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுதான். 1982ல் தொடங்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைகழகம் வலுவான கட்டமைப்பை கொண்டது. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் துடிப்பாக செயல்படும் போது நாடும் துடிப்பாக செயல்படும். இந்தியா வலிமையான நாடாக மாறி இருப்பதற்கு வலிமையான பல்கலைக்கழகங்கள் இருப்பது தான் காரணம்.
நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் உலக தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.இந்த சமூகம், மாணவர்களை நம்பிக்கையோடு பார்க்கிறது. நாட்டிற்கு உழைப்பது தான் கல்வியின் முக்கிய நோக்கம். கற்க கூடிய கல்வியை சமூகத்திற்கு பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் 74 விமான நிலையங்களே இருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 150ஆக உள்ளது என்று பேசினார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் M.செல்வம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.