ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடகோரி அவசர ஆலோசனை கூட்டம்.
பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை, விருந்தினர் மாளிகை அலுவலக வளாகத்தில் ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தற்போது நிலவிவரும் கடும் வெயிலால் வாடி கருகும் நிலையில் உள்ள விவசாய பயிர்களுக்கு உயிர் தண்ணீர் கொடுத்து காப்பாற்ற உடனடியாக ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக நீரேற்று பாசனத்திற்கு தண்ணீர் எடுப்பதை தடுக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேட்டூரிலிருந்து காவிரி ஆற்றில் 1400 கன அடி அளவு தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இந்த தண்ணீர் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் காவிரியின் கடை,மடை பகுதிகளுக்கு குடிநீருக்காக சென்றடையும் வகையில் அனைத்து பாசன வாய்க்கால்களிலும் பாசனத்திற்காக விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து ராஜா வாய்க்கால் மற்றும் அதன் துணை வாய்க்கால்களான பொய்யேரி, குமாரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்களை நம்பி சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் கரும்பு, வாழை, வெற்றிலை, கோரை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் பரவலாக கடும் வெயில் நிலவி வருகிறது. பரமத்திவேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் 110 டிகிரியை தாண்டி கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் விவசாய பயிர்கள் வாடி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெயிலின் கடும் வெயிலின் காரணமாக வாடி கருகும் நிலையில் உள்ள பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வழங்கிட ராஜா வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டியும், அனுமதி இன்றி காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து நீரேற்று பாசனதிட்டம் மூலம் 5 முதல் 25 கிலோமீட்டர் அப்பால் தண்ணீரை எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
. இது குறித்து மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை, மின்வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கள் கிழமை) 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து நேரில் மனு கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் பெரியசாமி, துணை தலைவர் குப்புதுரை, கொளரவ தலைவர் செந்தில்நாதன் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.