வாகன சோதனை தரம் உயர்த்த வேண்டும்

வாகன சோதனை தரம் உயர்த்த வேண்டும்

ஆய்வு கூட்டம்

மக்களவைத் தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் வாகனச் சோதனையின் தரம் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்று நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தேர்தல் கைப்பற்றுகளை, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து கூறுகையில், மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் சந்தேகத்துக்கிடமான அனைத்து வாகனங்களும் விடுபடாமல் சோதனை செய்ய வேண்டும். பிராதான சாலை மட்டுமல்லாது அனைத்து கிராம சாலைகளும் சோதனை செய்யப்படவேண்டும்.

அனைத்து வகையிலும் பெறப்படும் புகார்கள் குறித்த உண்மைத் தன்மையினை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். சோதனையின் தரம் மேலும் உயரத்தப்படவேண்டும். மேலும், சந்தேகத்துக்கிடமான இடங்களிலும், புகார்கள் அதிகம் வரப்பெறும் இடங்களிலும் சோதனைச் சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் விடுபடாமல் சோதனை செய்திட வேண்டும். மேலும், அனுமதியின்றி வைக்கப்படும் கொடிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை ஏதேனும் இருப்பின், அது குறித்த புகாரினை பதிவு செய்ய வேண்டும். தனியார் இடத்தில் உள்ள சுவர் விளம்பரங்கள் சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் அனுமதி பெற்றபின் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.

தேர்தல் விதிமுறைகள் ஏதும் மீறப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். வேட்பாளரால் பிரசாரம் செய்யப்படும் வாகனம் மற்றும் பிரசாரம் செய்யப்படும் நேரம், இடம் ஆகியவற்றுக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்திட வேண்டும். பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் பணி மிகவும் இன்றியமையாத பணியாகும். எனவே தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதுமின்றி தேர்தலை நடத்திட சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) சந்திரசேகர், தேர்தல் பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story