வேலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சொத்து விவரங்கள்!
ஏ.சி.சண்முகம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் சொத்து விவரங்களை பார்ப்போம்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கலில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் பின்வருமாறு: ஏ.சி.சண்முகம் கையிருப்பு தொகையாக ரூ.55 ஆயிரத்து 601-ம், அவரது மனைவி லலிதா லட்சுமியிடம் ரூ.85 ஆயிரத்து 480-ம் உள்ளது. வங்கிக்கணக்குகளில் ஏ.சி.சண்முகம் ரூ.94 லட்சத்து 64 ஆயிரத்து 43-ம், லலிதா லட்சுமி ரூ.1 கோடியே 17 லட்சத்து ஆயிரத்து 780-ம் இருப்பு வைத்துள்ளனர். ஏ.சி.சண்முகத்திடம் 2,105 கிராம் தங்கம், 20 கிலோ வெள்ளியும், லலிதா லட்சுமியிடம் 3,837 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளியும் உள்ளன. பல்வேறு வங்கிக்கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை, வைப்புத்தொகை, பங்கு முதலீடு, நகை என்று அசையும் சொத்துகளாக ஏ.சி.சண்முகத்திடம் ரூ.36 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 921-ம், லலிதா லட்சுமியிடம் ரூ.37 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரத்து 259-ம் உள்ளன. வேலூர், ஆரணி, பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நிலங்கள், காலிமனைகள், கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று ஏ.சி.சண்முகம் பெயரில் அசையா சொத்து ரூ.7 கோடியே 43 லட்சமும், லலிதா லட்சுமி பெயரில் ரூ.16 கோடியே 2 லட்சமும் உள்ளன. ஏ.சி.சண்முகத்துக்கு ரூ.17 கோடியே 72 லட்சமும், லலிதா லட்சுமிக்கு ரூ.11 கோடியே 12 லட்சமும் கடன் உள்ளன என தெரிவித்துள்ளார்.
Next Story