பதவி உயர்வு கேட்டு தொழிற்பயிற்சி அலுவலர் ஆர்ப்பாட்டம் 

பதவி உயர்வு கேட்டு தொழிற்பயிற்சி அலுவலர்  ஆர்ப்பாட்டம் 
தொழிற்பயிற்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு கேட்டு தொழிற்பயிற்சி அலுவலர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் 

மதுரையில் நடைபெற்ற, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின், மாநிலச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பயிற்சி அலுவலர் பதவி உயர்வை, உடனே வழங்கக்கோரி, நவ.30 வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் தஞ்சை கிளைத் தலைவர் கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சி.அஜெய்ராஜ் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.பாஸ்கர் வாழ்த்திப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி நிறைவுறையாற்றினார். கிளை உறுப்பினர் ஆர். ரமணி நன்றி கூறினார்.

பின்னர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வுபெறும் நிலையில், பயிற்சி அலுவலர் பதவி உயர்வு சமீபகாலமாக மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த 30.08.2023 அன்று திருச்சி ஐ.டி.ஐ.,யில் பணிபுரிந்த பால்ராஜுக்கு விதிகளின்படியும், உரிய காலியிடம் இருந்தும் பதவி உயர்வு மறுக்கப்பட்டு பணி ஓய்வுபெற்றார். கடந்த இரண்டு மாதகாலமாக தொடர்ந்து துறையிடம் முறையீடு செய்தும் தற்போது, அதே திருச்சி ஐ.டி.ஐ.,யில் பணிபுரிந்து வரும் சக்திகணேசனும் பதவி உயர்வின்றி பணி ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், எமது சங்க உறுப்பினர்களுக்கு வேண்டுமென்றே பதவி உயர்வு வழங்க மறுப்பதாக கருதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களது பிரதான கோரிக்கையாக சக்தி கணேசனுக்கு பயிற்சி அலுவலர் பதவி உயர்வு வழங்கி பணி ஓய்வுபெற ஆணை வழங்கிடக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது' இவ்வாறு தெரிவித்தனர்.

Tags

Next Story