இந்தியாவை காக்க இந்தியா கூட்டணிக்கு ஓட்டு : உலமா சபை கோரிக்கை

இந்தியாவை காக்க இந்தியா கூட்டணிக்கு ஓட்டு  : உலமா சபை கோரிக்கை

பைல் படம் 

பாஜகவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது..

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்வர் பாதுஷாஹ் உலவி, காஜா முயீனுத்தீன் பாகவி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை : 18வது இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மக்களவைத் தேர்தல் இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக அரசு முழுக்க முழுக்க மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டது.

சுதந்திரம் அடைந்த இந்தியாவில் நடைபெற்றிராத கொடுமைகள் பலவும் இந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ளன. இந்திய ஜனநாயகத்தின் அழகுக்கு அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத்தன்மையை அழித்து, மத, மொழி, இனவாரி சிறுபான்மையினரின் உரிமைகளை பாஜக அரசு பறித்தது. சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலானாய்வு ஏஜென்ஸி (என்.ஐ.ஏ) போன்ற உயர் அமைப்புகளை தனது அரசியல் சதித்திட்டங்களுக்கு பயன்படுத்தியதன் மூலம் நாட்டின் உயர் சுயச்சார்பு அமைப்புக்களை பாஜக அரசு கேலிக் கூத்தாக்கியது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களுக்கு முன் தோன்றி இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேர்ந்துள்ளதாக அறிவித்த அவலம் பாஜக அரசில் நடைபெற்றது. மொத்தத்தில் இந்திய நாடும் அரசியல் அமைப்புச் சட்டமும் பாஸிச பாஜக அரசின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த மக்கள் விரோத ஒன்றிய அரசை அகற்றியே தீர வேண்டும் என்று நாடு முழுவதிலும் மக்கள் தீர்மானமாக உள்ளனர். இந்த தேர்தலிலும் பாஜக வென்று விடுமானால் இனி நாட்டில் தேர்தலே நடைபெறாது என ஜனநாயக சக்திகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் தனிப்பட்ட விரோதப்போக்கில் பாஜக அரசு வன்மமாக செயல்பட்டு வருகிறது. எனவே தற்போது இந்தியாவை ஆளும் பாஜக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஓர் அபாயமாகவே ஆகிவிட்டது. நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த பேரபாயத்தை துடைத்தெறிவதையே ஒற்றை இலக்காக கொண்டு இந்த 2024 ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் தேசாபிமான சக்திகள் ஒன்றிணைந்து பாடுபட்டு வருகின்றனர். இந்த திசையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தேசத்தை காக்கும் பணியில் தனக்குள்ள கடமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இந்திய தேசத்தை காக்க இந்திய ஜனநாயகத்தை காக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்க - இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை காக்க - விளிம்பு நிலை மக்களின் நலனை காக்க முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உயிர் உடமைகளை பாதுகாக்க - உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் வாழும் உரிமையை பாதுகாக்க மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசை அகற்றுவதற்காக ஓரணியில் நின்று பாடுபடவேண்டியது அவசியம்.

ஆதலால், தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக அமையும் வாய்ப்பும் வலிமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளதாலும், இதரக் கட்சிகளுக்கு வாக்களிப்பதால் பாஜகவே மறைமுகமாக பயனடையும் என்பதாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ள I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பது என தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தீர்மானிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story