விசிக அறிக்கை
இந்தியா கூட்டணிக்கு பெருவெற்றி வழங்கிய மக்களுக்கு மனமார்ந்த நன்றி என விசிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் -19 முதல் ஜூன்-01 வரையில் நடந்த பதினெட்டாவது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலுக்கும் சரியான பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியதிகார ஆணவத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போட்ட சனாதன பெருமுலாளித்துவச் சுரண்டல் கும்பலின் இறுமாப்பை இது நொறுக்கியுள்ளது. குறிப்பாக, அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய அதிகார மமதையால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானங்களையே அசைக்கும் நோக்கில், "மதம் சார்ந்த ஒரே அரசு, மதம் சார்ந்த ஒரே தேசியம், மதம் சார்ந்த ஒரே தேசம் போன்ற பன்மைத்துவத்திற்கு எதிரான கட்டமைப்புகளை நிறுவிட அவர்கள் தீட்டிய கனவுத் திட்டங்களையெல்லாம் தகர்த்துத் தவிடு பொடியாக்கியுள்ளது.
தான்தோன்றித் தனமாக, தற்குறித் தனமாக பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றியும் கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களைத் தீட்டியும் எளியோருக்கு எதிராக ஆட்சி புரிந்த பாஜக மற்றும் சங்பரிவார்களின் கொட்டத்தை அடக்கித் தற்போதைக்கு இத்தேர்தல் முடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தற்காலிகமாகப் பாதுகாத்துள்ளது. இத்தேர்தல், "சனாதன- கார்ப்பரேட்" கொள்ளைக் கும்பலுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய ஒரு மாபெரும் அறப்போரே ஆகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 'இந்தியா கூட்டணி' கட்சிகள் யாவும் சுட்டிக்காட்டின. அத்துடன், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் இதன் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான நாடாளுமன்ற சனநாயகத்தையும் பாதுகாக்கவே இந்திய மக்களோடு இக்கூட்டணி இணைந்து களமாடியது.
இதனடிப்படையில், காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 99 இடங்கள் உள்ளிட்ட 234 இடங்களில் 'இந்தியா கூட்டணி' பெற்றுள்ள வெற்றி இந்திய மக்களுக்கான மாபெரும் வெற்றியே ஆகும் இந்தியா கூட்டணியால் ஆட்சியமைக்க இயலவில்லை என்றாலும், பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு மிகப்பெருமளவில் அதிர்ச்சியளிக்கும் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜகவுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிட்டவில்லை. மாறாக, கடந்த தேர்தலைவிட தற்போது 63 இடங்களை அக்கட்சி இழந்துள்ளது. அத்துடன், அவர்தம் கூட்டணி ஒட்டுமொத்தமாக 300 இடங்களைக்கூட எட்டவில்லை. எனினும், கூட்டணி கட்சிகளின் கடுமையான பேர நெருக்கடிகளுடன் கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது.
பாஜக பெற்றுள்ள இவ்வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றியே ஆகும். தனிப் பெரும்பான்மை இல்லாத வகையில்; ஐந்தாண்டுகளுக்கு நிலையாக ஆட்சி நடத்தமுடியாத வகையில்; ஆட்சியமைப்பதற்கே பிற கட்சிகளின் தயவை நாடும் வகையில் அதிகார அகந்தையென்னும் நச்சுப் பற்களைப் பிடுங்கும் வகையில் இந்திய மக்கள் பாஜகவுக்கு எதிராகவே இத்தீர்ப்பை எழுதியுள்ளனர். இந்தியர்களை 'இந்து சமூகத்தினர்' என்றும், 'இந்து அல்லாத பிற மதத்தினர்' என்றும் பாகுபடுத்தித் தொடர்ந்து அரசியல் ஆதாயம் காணும் பாஜகவினரின் சதி அரசியல் முயற்சிகளை முறியடித்துள்ளனர்.
குழந்தை இராமருக்கு கோவிலைக் கட்டிக் கொண்டாட்டம் நடத்திய உத்தரபிரதேச மண்ணிலேயே பாஜகவுக்கு மக்கள் படுதோல்வியைப் பரிசாக அளித்துள்ளனர். அதாவது, பெரும்பான்மை இந்துச் சமூகமே பாஜகவைப் புறக்கணித்துள்ளது என்பதுதான் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் இயல்பான உண்மையாகும். இத்தகைய வரலாற்றுத் தீர்ப்பை வழங்கிய இந்திய மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அத்துடன், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து சாதிய- மதவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.