ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வேணுமா? 20 குறள்கள் ஒப்புவித்தால் போதும் !

மலைக்கோவிலூரில், திருவள்ளுவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்படுகிறது.

கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி மற்றும் வள்ளுவர் உணவகம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருபவர் செங்குட்டுவன். வாழ்வியல் நாயகன் வள்ளுவர் பெருந்தகை வழங்கிய திருக்குறள்களில் உள்ள கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் செங்குட்டுவன். இதனால் தனது நிறுவனத்திற்கு வள்ளுவர் என பெயர் சூட்டி நடத்தி வருகிறார்.

அதேசமயம், வள்ளுவரின் கருத்துக்களை வாழும் சமுதாயத்தினரும், வளரும் மாணவப் பருவத்தினரும் அறிய வேண்டும் என ஆவல் கொண்டவர். வள்ளுவர் பிறந்த தினமான இன்று வருடம் தோறும் 20 திருக்குறள்களை ஒப்புவித்து அதற்கான விளக்கத்தையும் மாணவர்கள் அளித்தால் அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றும்,நாளையும் (ஜனவரி 16,17) பரிசாக வழங்குவதாக அறிவித்து, இன்று துவக்கி உள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர்கள், இன்று தங்களது குழந்தைகளுடன், கரூரை அடுத்த மலைக்கோவிலூர் பகுதியில் செயல்படும் செங்குட்டுவன் நடத்தி வரும் பெட்ரோல் பங்கிற்கு சென்று, குறள்களை ஒப்புவித்து, பெட்ரோலை பரிசாக பெற்றுச் சென்றனர்.

Tags

Next Story