வெலிங்டன் ராணுவ கல்லூரி கோப்பை;முதல் பரிசு ரூ. 3 லட்சம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெலிங்டன் ராணுவ கல்லூரி கோப்பை போட்டியில் குதிரைகள் சீறிப் பாய்ந்தன.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உட்பட பல கண்காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நடத்தப்படுகிறது. இதுபோல மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குதிரைப் பந்தயம் கடந்த ஒரு மாதமாக வார இறுதி நாட்களில் நடைபெற்று வருகிறது. இதில் டெர்பி உள்பட முக்கிய பந்தயங்கள் முடிந்து விட்டன. இந்நிலையில் நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் குதிரை பந்தயம் நடக்கும் மைதான ஓடுதளம் சேதம் அடைந்ததால் குதிரை பந்தயம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மே 18, 19, 25, 26, ஆகிய 4 நாட்கள் நடக்க இருந்த குதிரை பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட பந்தயங்கள் ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று வெலிங்டன் ராணுவ கல்லூரி கோப்பை போட்டி நடைபெற்றது. சைனோசுர் குதிரை ஒரு நிமிடம் 19 நொடிகளில் இலக்கை அடைந்து முதல் பரிசு பெற்றது. முதல் பரிசு பெற்ற குதிரைக்கு ரூ.3 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இன்று மழை பெய்ததால் 4 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டது. நாளையுடன் குதிரை பந்தயம் நிறைவு பெறுகிறது.

Tags

Next Story