"தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது?" - ஆர்பி உதயகுமார்!
ஆர்பி உதயகுமார்
தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று வெளியிட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் மற்றம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பாஜகவோடு இணக்கம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். திமுக - பாஜக திடீரென பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பிய ஆர்பி உதயகுமார், பாஜக - திமுக இடையேயான உறவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தார் ஆர்பி உதயகுமார். அண்ணாமலைக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவை என்றும் அரசியல் அனுபவமும் புரிதலும் இல்லாத தலைவராக அண்ணாமலை உள்ளார் என்றார். அண்ணாமலைக்கு தமிழகத்தின் நிலவரமும் தெரியவில்லை, கலவரமும் தெரியவில்லை என்றும் ஆர்பி உதயகுமார் கூறினார்.