ஈரோடு கிழக்கில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்; முட்டி மோதுவது யார்?
Congress candidate
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் காலமானதையடுத்து அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் அறிவிக்கப்படும் போது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தோதல் நடத்தப்பட்ட போது, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 49,981 வாக்குகளைப் பெற்ற நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளைப் பெற்றார். வாக்கு வித்தியாசம் மட்டும் 66,575ஆக இருந்தது. இந்த முறை வேட்பாளர்களை பொறுத்தவரை, இங்கு இந்தியா கூட்டணி போட்டியிடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி வேட்பாளர் என்றால் அது காங்கிரஸ் வேட்பாளரா அல்லது திமுக வேட்பாளரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அது மட்டுமின்றி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறை வென்றாக வேண்டும் என்ற இலக்கை திமுகவினருக்கு ஸ்டாலின் நிர்ணயித்து இருப்பதாகவும் பேசப்படுகிறது. கூட்டணி தர்மத்தின் படி இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ்காரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இதற்கான ரேசில் யார் யாரெல்லாம் உள்ளார்கள் என்று உள்ளூர் காங்கிரசார் சிலரின் பெயர்களை தெரிவித்து உள்ளனர். அதில் முதலிடத்தில் இருப்பது, மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் இளங்கோவன் தான். ஆனால், அவரது குடும்பத்தினர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுறது. 2026 தேர்தலில் போட்டியிடலாம் என்று சஞ்சய் இளங்கோவன் குடும்பத்தினர் கருதுகிறார்கள் என்ற தகவல்கள் உள்ளன. இதனால் உள்ளூர்க்கார காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பு வழங்கலாம் என்ற முடிவில் சஞ்சய் இளங்கோவன் குடும்பத்தினர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ரேசில் அடுத்து இருப்பது கே.பி. முத்துக்குமார். தொழிலதிபரான இவர் தற்போது ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த கே.பி.முத்துக்குமார், 1998 ஆம் ஆண்டு முதல் காங்கிரசில் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர், மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவு மாநில துணை தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 54 வயதான இவர் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். கட்சி பொறுப்புகள் மட்டுமின்றி, ஈரோடு வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகளில் பொறுப்புகள் வகித்து வருகிறார். இந்த தொகுதியில் போட்டியிட வசதியான நபர் கே.பி. முத்துக்குமார் என்று உள்ளூர் காங்கிரஸ்காரர்களால் பேசப்படுகிறது. திமுக ஒருவேளை இத் தொகுதியில் போட்டியிட்டால், வேட்பாளராகும் வாய்ப்பு மாவட்ட செயலாளர் வி.சி.சந்திரகுமாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இந்த முறை எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு ஈரோடு மாவட்ட செங்குந்தர் முதலியார் சங்கம் கோரிக்கை விடுத்தது. தொகுதிக்குள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை கொண்ட செங்குந்தர் முதலியார் சமுதாயத்துக்கு இம்முறை வாய்ப்பு வழங்க வேண்டும், அப்படி வழங்கினால் ஈரோடு மாவட்ட திமுக செயலாளர்களில் ஒருவரான வி.சி.சந்திரகுமாருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போது ஈரோடு வந்த முதல்வரின் மருமகன் சபரீசன், ஈரோடு செங்குந்தர் முதலியார் சமூக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நேரத்தில் முக்கிய கோரிக்கையாக செங்குந்தர் முதலியார் சமூகத்தை சேர்ந்த விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று சபரீசனிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் வி.சி. சந்திரகுமாரின் மகள் திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இங்கு அதிமுக வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்ட கே.எஸ். தென்னரசு அல்லது முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் அல்லது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட ஆற்றல் அரசு களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் மூவரும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இங்கு போட்டியிட அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தான் கொங்கு மண்டலத்தில் நடிகர் விஜய்க்கு முதல் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர். தொழில் முனைவோரான பாலாஜி, கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் விக்கிரவாண்டியை போன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதுடன், யாருக்கும் ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டை விஜய் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஏற்கெனவே இடைத்தேர்தலில் போட்டியிட்ட மேனகா நவநீதன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள செங்குந்தர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த தேர்தலைப்போல இம்முறையும் செங்குந்தர் வாக்குகளை அள்ளி விடலாம் என்று சீமான் திட்டமிட்டு வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு கொங்கு வெள்ளாளர் கவுண்டர், செங்குந்தர் முதலியார், இஸ்லாமியர், அருந்ததியர் ஆகிய 4 சமுகங்களின் வாக்குகள் தான் அதிகமாக உள்ளன. இந்த சமூக வாக்குகள் வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. கொங்கு வேளாளர் கவுண்டர் மற்றும் செங்குந்தர் முதலியார் சமூக வாக்குகள் இம்முறை பிரிந்தாலும், அருந்ததியர் மற்றும் இஸ்லாமியர் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.