அரசியல் விவாதங்களை துவக்குமா துணை வேந்தர்கள் மாநாடு?..

அரசியல் விவாதங்களை துவக்குமா துணை வேந்தர்கள் மாநாடு?..

பைல் படம்

ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் வரும் 27, 28 -ம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தரான மாநில ஆளுநர், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தமிழக அரசுக்கு சித்தாந்த ரீதியான மோதல் போக்கு தொடர்கிறது. ஒரு கட்டத்தில், சில மாநிலங்களில் உள்ளதுபோல் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் தமிழக அரசு மசோதா நிறைவேற்றியது.

பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநரின் தலையீடு இருப்பதில்லை என்ற நிலை மாறி, அதில் சில பிரச்னைகள் எழுந்து அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால் அதில் ஒரு தீர்க்கமான முடிவை தமிழக அரசால் முடிவெடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசும், ஆளுநரும் அவரவர் அதிகாரத்தை பயன்படுத்தி பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை 2020-ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதில் பல அம்சங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் உத்தரவின் பேரில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.

இதில் காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்கள் பன்முக திறமை மிக்கவர்களாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு பல்கலைக்கழகங்கள் புதிய செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். இந்த பேச்சு தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. இதேபோல் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில், பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டும் வெளிநாடுகளில் இருந்து முதலீடு வந்து விடாது. அதற்கான சூழலை இங்கு உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அப்போதே பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சி, மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவருக்கு மட்டும் புலப்படவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக சுட்டிக்காட்டி விமர்சித்தார். மேலும் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட பல்வேறு அமைச்சர்களும் காட்டமாக பதில் அளித்த சம்பவம் அரசியல் பரபரப்பை அதிகப்படுத்தியது

. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் வருகிற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் மீண்டும் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 48 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி வருகிற 25-ம்தேதி ஊட்டி வருகிறார். 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார்

. 29-ம் தேதி கோத்தகிரியை அடுத்த கோடநாடு காட்சி முணைக்கு செல்கிறார். இதற்கிடையே துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். கடந்த காலங்களில் ஊட்டி ராஜ்பவனில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் ஏற்பட்டதால், இந்த ஆண்டு நடக்க உள்ள மாநாடும் பல்வேறு தரப்பினரிடையே கவனத்தை பெற்றுள்ளது.

Tags

Next Story