காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்!

காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்!

சாலைமறியல்

ஒடுகத்தூர் அருகே குடிநீர் இல்லாததால் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள தோளப்பள்ளி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.அங்குள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 15 நாட்களாக சீரான குடிநீர் இல்லை என கூறப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திடீரென காற்று மழை பெய்தது. இதில் மரங்கள் மின்கம்பங்கள் மீது சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்தது இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இருப்பினும் குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் மட்டும் வழங்கி வருவதால் சீரான மின்சாரம் இல்லாமல் தற்போது வரை பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 3 நாட்கள் ஆகியும் தோளப்பள்ளி ஊராட்சி பகுதிகளில் இன்னும் முழுமையான மின்சாரம் வழங்காததால் குடிநீர் வழங்க முடியாமல் தண்ணீர் பிரச்னை தொடர்கிறது. இதனால், கடும் அவதிக்குள்ளான கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக ஒடுகத்தூர்- குடியாத்தம் செல்லக்கூடிய பஸ்கள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் தோளபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

Tags

Next Story