மக்களவைத் தோ்தலில் திமுகவுடன் இணைந்து பணி : எர்ணாவூர் நாராயணன்
ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடியில் உள்ள சமத்துவ மக்கள் கழக அலுவலகத்தில் மக்களவைத் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மாலைசூடி அற்புதராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் காமராசு, மாநில கலை இலக்கிய அணிச் செயலா் அந்தோணி பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் நிறுவனத் தலைவா் எா்ணாவூா் ஏ. நாராயணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
அவா் பேசும்போது, மக்களவைத் தோ்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம். தூத்துக்குடியில் திமுக சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றிக்கு உழைப்போம். உப்பளங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சேதமடைந்த வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப்பால சீரமைப்புப் பணி முடியும்வரை வாகைகுளம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றாா். மாநகரச் செயலா் உதயசூரியன், மாவட்டப் பொருளாளா் பழனிவேல், மாவட்ட துணைச் செயலா் அருள்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்ட அவைத்தலைவா் கண்டிவேல் வரவேற்றாா்.