காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி மேல்பிலியூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள். இவருடைய மகள் பிரின்சி (வயது 16). இவர், அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரும், வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்த ஒரு வாலிபரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிறுநீரக கோளாறு பாதிப்பு காரணமாக அந்த வாலிபர் இறந்துவிட்டார். இதனால் அந்த துக்கம் தாங்க முடியாமல் சிறுமி மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் தாய் அந்தோணியம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இதனால் வீட்டில் சிறுமி பிரின்சி மட்டும் தனியாக இருந்தார்.
இதையடுத்து பிற்பகலில் சிறுமியின் தாய் சிகிச்சை முடித்துக்கொண்டு பஸ் ஏறி வீட்டிற்கு வந்தார். அவர் வீட்டிற்கு சென்றபோது, ஒரு அறையில் மகள் பிரின்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
