ஸ்டெதாஸ்கோப் வரலாறு தெரியுமா?
ஸ்டெதாஸ்கோப்
ஸ்டெதாஸ்கோப்பை முதலில் உருவாக்கியவர் ரெனிதியபில் ஹயாஸிந்த் லானக் என்னும் பிரெஞ்சு மருத்துவர் ஆவார். அவர் 1816-இல் ஒரு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இதய நோயால் அவதிப்படுபவர்களின் இதயத்துடிப்பை எவ்வாறு அறிவது என்று அவர் பல நாள் சிந்தனை செய்தார். விளைவு?
அவர், ஒரு தாளை எடுத்து குழல் போல சுருட்டினார். அக்குழலின் ஒரு முனையை இதய நோயாளியின் இதயத்தில் வைத்தார். மற்றொரு முனையில் தம் காதை வைத்துக் கொண்டு நோயாளியின் இதயத்துடிப்புகளைக் கேட்டார். நோயாளியின் இதயத்துடிப்புகள் மிகத் துல்லியமாகக் கேட்டன. பிறகு, அவர் மரத்தினால் ஒரு குழல் செய்தார்.
அக்கருவிக்கு 'ஸ்டெதாஸ்கோப்' என்னும் பெயர் சூட்டி அக்கருவி மூலம் இதயத்துடிப்புகளைக் கேட்டார். இந்த பிரெஞ்சு மருத்துவரே படிப்படியாக ஸ்டெதாஸ்கோப்பை உருவாக்கினார். இதன் வளர்ச்சியாக, இன்று டாக்டர்கள் தம் இரு காதுகளிலும் மாட்டிக்கொண்டு இதயத்துடிப்புகளை அளக்கும் ஸ்டெதாஸ்கோப்பை 1855-இல் ஜார்ஜ் ஃபிலிப் கேம்மான் என்னும் நியுயார்க்கைச் சார்ந்த மருத்துவர் உருவாக்கினார்.