திருவண்ணாமலை தீபத் திருவிழா.. அதிகார வர்க்கத்துக்கான விழாவா?
திருவண்ணாமலை தீபத் திருவிழா.. அதிகார வர்க்கத்துக்கான விழாவா?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்த கார்த்திகை தீபத் திருவிழா என்பது, பக்தர்களின் விழாவாக இல்லாமல் அதிகார வர்க்கத்தின் விழாவாக வழக்கம்போல் நடந்து முடிந்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் நிகழ்வை தரிசிக்க, ‘ஆன்லைனில்' கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றவர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர் பெயரில் அச்சடிக்கப்பட்ட அட்டை, வட்ட அளவிலான பிரத்யேக அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்களை அனுமதிக்கவில்லை.
கோயில் கட்டளைதாரர் மற்றும் உபயதாரர் என சுமார் 200 பேர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களது பெயரில் சுமார் 15 ஆயிரம் அட்டைகள் அச்சிட்டு, துண்டுப் பிரசுரங்கள் போல் வழங்கியுள்ளனர். அண்ணாமலையார் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை காவல்துறையினர், முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்ட பிறகும், கோயிலின் உள்ளே காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன் முதல் டி.ஐ.ஜி.,கள், எஸ்.பி.,கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு என்ற பெயரில், ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயுதப்படை காவலர்கள் சூழ்ந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்தவர்களுக்கு பாதுகாப்பு ஏன்? என்ற கேள்வி முதலில் எழுகிறது. கோயில் உள்ளே காவலர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற அமைச்சர் எ.வ.வேலுவின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டது. கோயில் உட்பிரகாரங்கள் அனைத்திலும், எங்கு நோக்கிலும் ‘காக்கி சட்டைகள்’ நிறைந்திருந்தன. ‘ஆன்லைனில்' கட்டணம் செலுத்தியவர்கள், கட்டளைதாரர் மற்றும் உபயதாரர் என்ற பெயரில் அச்சடிக்கப்பட்டிருந்த அட்டையை வைத்திருந்த பக்தர்கள், புழுவை போல் நசுக்கப்பட்டனர். அவர்களுக்கான வழித்தடம் ஒரு அடியில் அமைத்து, கயிற்றை கொண்டு காவல் துறையினர் இறக்கமின்றி இறுக்கிவிட்டனர். வட்ட அளவில் அச்சடிக்கப்பட்ட பிரத்யேக அட்டையை வைத்திருந்த வி.ஐ.பி.,கள், வி.வி.ஐ.பி.,களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டன. அவர்கள் செல்வதற்கு பாதுகாப்பு அரணாக காவல் துறையினர் இருந்தனர். அவர்கள் மீது தூசு கூட விழாத அளவுக்கு, தங்களது பணியை செவ்வனே செய்திருந்தனர்.
பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதை தரிசிக்க முந்தைய காலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் விடியல் கிடைக்கும் என காத்திருந்த ஏழை மற்றும் நடுத்தர பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதேபோல், பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டும், ஆளுங்கட்சிக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் ஏமாற்றமும் ஏற்பட்டது. மாவட்ட செய்தி தொடர்பாளர் தொலைபேசி எண் காலை முதல் மாலை தீபம் முடியும் வரை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட கண்காணிப்பாளர் , டி.எஸ்.பி குணசேகரன் மற்றும் காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது சரியான விளக்கமும், அனுமதியும் மறுக்கப்பட்டது.
சபரிமலை, திருப்பதி போன்ற கோயில்களில் இதுபோன்று நடைபெறவது இல்லை என கூறும் பக்தர்கள், 'கோயில் விழா என்பது சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கான விழாவாகும். ஆனால், கார்த்திகை தீபத் திருவிழா மட்டும் அதிகார வர்க்கத்தின் விழாவாக தொடர்ந்து நடக்கிறது. கார்த்திகை தீபத் திருவிழாவானது பக்தர்களுக்கான விழாவாக எதிர்காலத்தில் நடக்க அண்ணாமலையாரே ‘கண்’ திறக்க வேண்டும்” என்றனர்.