மெரினா கடற்கரை !
மெரினா கடற்கரை
தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் நீளமுடையது. உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரைஎன்ற பெருமை நமது மெரினாவுக்கு உண்டு. சென்னை துறைமுகம் உருவாவதற்கு முன் மெரினா கடற்கரை ஆனது வெறும் களிமண் நிறைந்த பகுதியாக இருந்து வந்தது .1880 ஆம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டுவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப் தான் முதன்முதலில் அழகாக இக்கடற்க்கரையை வடிவமைத்தார். இந்த பராமரிப்பின் தொடர்ச்சி தான் நவீனப்படுத்தப்பட்ட இன்றைய மெரினா கடற்கரை. 1968 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலக தமிழ் மாநாட்டை ஒட்டி அழகிய மெரினா கடற்கரை நெடுகிலும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டன. கல்வியில் புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகமும், தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகமும், இந்திய அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் இங்குதான் அமைந்திருக்கின்றன. இந்தியாவின் சுதந்திர திருநாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசு துறைகளின் கண்கவர் அலங்கார ஊர்தி அணிவகுப்பு இங்கு தான் நடைபெறும். இக்கடற்க்கரையை காண தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். காலையில் நடை பயிற்சி செய்பவர்கள், பெரியவர் முதல் சிறியவர் வரை பலபேர் இங்கு வந்து செல்கின்றனர். நகர மக்களுக்கும், சென்னையை சுற்றிப் பார்க்க வரும் பிற மக்களுக்கும் இக் கடற்கரை ஒரு சரணாலயம். சுத்தமான காற்றை சுவாசிக்க கடற்கரைக்கு போகலாம் என்ற கூற்று இங்கு வந்தால் அது உண்மையாகும்.