வள்ளுவர் கோட்டம் !
வள்ளுவர் கோட்டம்
திருவள்ளுவரால் எழுதப்பெற்ற திருக்குறள் உலகப் பொதுமறை என புகழப்படுகின்றது. திருவள்ளுவர் சார்பு கடந்து மானுடத்தையே நோக்காக கொண்டு திருக்குறளை எழுதினார்."வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று மகாகவி பாரதியார் திருவள்ளுவரை உலகத்திற்கே பொதுவானவராகவும் அவரை ஈன்றதால் தமிழ்நாடு வான் புகழ் பெற்றது எனவும் போற்றியுள்ளார் .இவர் எழுதிய திருக்குறள் சங்க கால மதுரை பாண்டிய மன்னன் அரசவையில் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக கூறுவாரும் உளர் .உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் முக்கிய இடத்தை பெறுகின்றது. தமிழுக்கும் தமிழருக்கும் பெருமையையும் சிறப்பையும் நல்கிய திருவள்ளுவரைப் போற்றி மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு வள்ளுவர் கோட்டத்தை எழுப்பி உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குறல்மணி மாடத்தில் 1330 குறட்பாக்கள் ஐந்து அடி உயரம் இரண்டு அடி அகலம் உள்ள அரியவண்ண சலவை கற்பலகைகளில் திறந்த புத்தக வடிவில் தூணுக்கு இரண்டு அதிகாரங்கள் வீதம் பொறிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்தில் மணிமாடத்திற்கு மேலே 220 அடி நீளம் 140 அடி அகலம் கொண்ட வேயா மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேரின் கலயம் ,தேர் கூரை, கருவறையில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகிய மூன்றின் நிழல் உருவங்கள் தெரியும் வண்ணம் இரண்டு பெரிய நீர் நிலைகளும் ஒரு சிறிய நீர் நிலையும் அமைக்கப்பட்டுள்ளன .வள்ளுவர் கோட்டத்தின் கருவறையில் இரண்டடி உயரம் உள்ள பீடத்தின் மேலே முப்பாலை குறிக்கும் வண்ணம் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் 7-அடி உயரம் உள்ள ஒளிமிக்க கருங்கல்லாலான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறல் மணிமாடத்திற்கு கீழே 220 அடி நீளம் 100 அடி அகலம் கொண்ட கூடத்தில் தூண்களே இல்லாத 3500 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை காணும் வண்ணம் பெரிய அரங்க மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அரங்க மேடையின் நடுவே திருவள்ளுவரின் வண்ண ஓவியமும், இடதுபுறத்தில் சங்க புலவர்கள் அதங்கோட்டாசான் திருவுருவப்படமும், வலதுபுறத்தில் தொல்காப்பியர் திருவுருவப்படமும் அரங்குக்கு அணிசேர்க்கின்றன .அரசு மற்றும் தனியார் விழா நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. வள்ளுவர் கோட்டம் சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் 15.04 .1976. அன்று திறந்து வைக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக நாள்தோறும் காலை 8.00 மணி முதல் மாலை 6 .00மணி வரை திறந்து வைக்கப்படுகிறது.