கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலம் வேளாங்கண்ணி !
வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி ஒரு புகழ் பெற்ற கிறித்துவ புனித யாத்திரை தலம். இது கிழக்கு கடற்கரை சாலையில் காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 26 கிலோ மீட்டர் தொலைவில் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வேளாங்கண்ணியில் வீற்றிருக்கும் புனித அன்னை மேரி ஆலயம் ,நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை மையத்தில் ஒன்றாகும். இது "கிழக்கின் லூர்து " என பிரபலமாக அறியப்படுகின்றது. இந்தியாவுக்கு பாய்மர கப்பலில் பயணம் செய்த போர்ச்சுகீசியர்கள் சிலர் நடுக்கடலில் வீசிய புயலில் சிக்கிக்கொண்டனர் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த அவர்கள் அன்னை மரியாவிடம் உதவி கேட்டனர். அம்மா ,நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஒரு ஆலயம் கட்டுவோம், என்றும் வாக்குறுதி அளித்தனர் . மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் ஓய்ந்தது .கப்பலில் பயணம் செய்த போச்சு பேசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8-ம் தேதி தேவமாதாவின் பிறந்தநாள். தங்களை பத்திரமாக கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர் .கலைவண்ணமிக்க பீங்கான் ஓடுகளால் ஆலய பீடத்தை அலங்கரித்தனர். தங்கள் கப்பலின் பாய்மரத்தூணை ஆலய கொடிமரமாக நாட்டினர் .அதில் தான் இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. போர்ச்சுக்கீசியர்கள் கரை சேர்ந்த நாளான மாதாவின் பிறந்தநாளிலேயே வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும்பாலான பக்தர்கள் அன்னையின் திருவருளை பெறவேண்டி நடைபயணமாகவே இவ்வாலயத்தை அடைவது மிக சிறப்பு. வேளாங்கண்ணி கோயில் ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.