உக்ரைன் நாட்டில் 51 பேர் கொலை
உக்ரைன்
உக்ரைன் நாட்டில் உணவகம் மற்றும் மளிகை கடை மீது ரஷ்யா ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 51 பேர் கொல்லப்பட்டனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1.5 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில், கார்க்கிவ் மண்டலத்தின் குபியான்ஸ்க் மாவட்டத்தில் உள்ள அரோசா கிராமத்தில் உணவகம் மற்றும் மளிகை கடை மீது ரஷ்ய ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசியது. இதில் கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி, கான்க்ரீட் குவியல்களாக மாறியது. இடிபாடுகளில் சிக்கி 51 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு ஆங்காங்கே அடுக்கி வைத்திருக்கும் காட்சி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் ஐரோப்பிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலின்ஸ்கி தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருந்த போது, திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதால் உக்ரைன் அதிருப்தி அடைந்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இறந்தவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். சாதாரண மளிகை கடையை ராக்கெட் மூலம் தாக்குவது என்பது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 19 மாதங்களில் அதிகளவில் பொதுமக்களை பலி வாங்கிய தாக்குதல் என்பதால் சர்வதேச நாடுகள் ரஷ்யாவின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.