லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 11 பேர் உயிரிழப்பு!!
Israel - Lebanon
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதலில் இது வரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ஹிஸ்புல்லா தலைவர் உள்பட பலர் உயிர் இழந்து விட்டனர், இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இருந்த போதிலும் இரு படையினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சில இடங்களில் தாக்குதல் நடந்து வருகிறது. இஸ்ரேல், லெபனான், சிரியா நாடுகளின் எல்லையையொட்டி உள்ள இஸ்ரேல் வடக்கு மவுண்ட் டோஸ் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 2 ராக்கெட்டுகளை வீசினர். இஸ்ரேல் மீது முதன் முதலாக ஹிஸ்புல்லா இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது, இந்த 2 ராக்கெட்டுகளும் திறந்த வெளியில் விழுந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஹரிஸ், டல்லூசா, ஆகிய கிராமங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த பகுதியில் சரமாரியாக நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் உயிர் இழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பலர் காயம் அடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டி உள்ளது.