"உலகில் 4 கோடி பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு" - ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
ஐநா
கடந்தாண்டில் உலகம் முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் ஹெச்ஐவி நோய் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், அதில் 90 லட்சம் மக்கள் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருப்பதாகவும் ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்ற ஆண்டில் உலகம் முழுக்க 4 கோடி மக்கள் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உலகமெங்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் நிதிகள் கிடைக்காமல் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறைந்து, புதிய நோய்த் தொற்றுகள் உருவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 6.3 லட்சம் மக்கள் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2004-ம் ஆண்டில் 21 லட்சம் மக்கள் உயிரிழந்ததே இதுவரையிலான அதிகபட்சமாகும். ஆனால், 2025-ல் உயிரிழப்புகள் 2.5 லட்சமாக குறையும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது என ஐ.நா- வின் எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க ஒதுக்கப்பட்டு, பாகுபாடு காட்டப்படுபவர்களான பாலியல் தொழிலாளர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மட்டுமின்றி போதைப் பொருள் உபயோகிப்பவர்களும் கடந்த ஆண்டில் 55% ஆக உயர்ந்துள்ளனர். இது 2010-ல் 45% இருந்தது என கூறப்பட்டுள்ளது.