ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனையிடம் காதலை வெளிப்படுத்திய சக வீரர் !
ஹியாங் யா கியாங் - லியூ யூசேன்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனையிடம் சக வீரர் தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை ஹியாங் யா கியாங்க்கு மற்றொரு இனிப்பான சம்பவமும் அரங்கேறியது.
தங்கம் வென்ற உற்சாகத்தில் இருந்த தங்கமகள் ஹியாங் யா கியாங்கிடம் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.
மேலும், தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு “என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்று கேட்டார்.
அதைப்பார்த்த மகிழ்ச்சியில் லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார்.
பின்னர் லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார். இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.