ஹர்தீப் சிங் கொலை வழக்கில் இந்தியர்களை கைது செய்தது கனடா!
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மூன்று இந்தியர்களை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்துடன் காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட போதிலும், வெளி நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் தொடர்ச்சியாக காலிஸ்தான் கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.
கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவரும், அந்நாட்டு குடியுரிமை பெற்று வசித்து வந்தவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் இந்தியா - கனடா இடையே ராஜீய ரீதியிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார்(22), கமல்ப்ரீத் சிங்(22), கரன்ப்ரீத் சிங்(28) ஆகிய 3 இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்திய அரசுடன் இந்த மூவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் கனடா போலீசார் கூறியுள்ளனர்.