தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபாச சித்திரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
எங்கும் AI எதிலும் AI
எங்கும் AI எதிலும் AI என்பதுபோல், அனைத்து துறைகளிலும் AI கால் பதிக்கத் தொடங்கிவிட்டது. இன்றைய இணையத்தின் இன்றியமையாததாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே, தற்போது பல்வேறு இணையக் குற்றச் செயல்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக AI-யின் டீப் ஃபேக் தொழில்நுட்பம் பல்வேறு சர்ச்சைக்குரிய இடர்பாடுகளை மக்களுக்கு ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதில் சினிமா பிரபலங்கள் முதல் பிரதமர் வரை பலரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தனர்.
இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு, இந்தியாவில் செயல்படும் இணையதள நிர்வாகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த நிலையில் சமூக வலைதள பகுப்பாய்வு (social media analytics) நிறுவனமான கிராப்பிகா (Graphika) நடத்திய பகுப்பாய்வின் முடிவில், AI தொழில்நுட்பப் பயன்பாடு குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
அதில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை எக்ஸ் (x), Redditt போன்ற சமூக வலைதளப் பக்கங்களில், ஆபாசப் படங்களைப் பதிவிட்டு விளம்பரம் செய்யும் இணைப்புகளில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 2,400 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
AI Deep fake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவர் இருப்பது போன்று சித்திரிக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரை நிர்வாணமாகவும் ஆபாசமாகவும் சித்திரிக்கும் "nudify" சேவை வழங்கும் இணையதளங்களை இந்த ஆண்டு செப்டம்பரில் மட்டும் 24 மில்லியன் மக்கள் பயன்படுத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருப்பதிலிருந்து திருடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இணையதள செயலிகளிடம் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு ஆபாசமான பதிவுகளை நீக்கி வருவதாகவும், ஆபாசம் சார்ந்த தேடல்களுக்குச் சேவை வழங்கப்படுவதில்லையெனவும் கூகுள், Redditt போன்ற நிறுவனங்கள் பதிலளித்துள்ளன. டிஜிட்டல் உலகில் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் எலக்ட்ரானிக் பிராண்டியர் பவுண்டேஷனின் இணையப் பாதுகாப்பு இயக்குநர் ஈவா கல்பெரின் (Eva Galperin), ``சாதாரண மக்கள் முதல் கல்வி பயிலும் மாணவர்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.
டீப் ஃபேக் ஆபாச வீடியோக்களை உருவாக்குவதையும் வெளியிடுவதையும் தடுக்க எந்தச் சட்டமும் இதுவரை இல்லை. அதுதான் இது போன்ற பிரச்னைகள் அதிகரிக்கக் காரணம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியை இது போன்ற தவறான செயல்களுக்குப் பயன்படுத்துவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.