"காசா மக்கள் படும் துயரத்தை பார்த்து நான் அமைதியாக இருக்கமாட்டேன் "- கமலா ஹாரிஸ் !!
கமலா ஹாரிஸ்
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்துவருகிறது. காசா பேரழிவை சந்தித்து வருகிறது.
ஹமாஸ் அழிக்கப்படும்வரை போர் தொடரும் என்ற அறைகூவலுடன் இஸ்ரேல் வான்வழி, தரைவழி என கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காசா உருக்குலைந்துவிட்டது. இதுவரை 25000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள். இதனாலேயே ஐ.நா., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், உலக நாடுகள் பலவும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நேதன்யாகுவிடம் பேசுகையில், கடத்த 9 மாதங்களாக காசாவில் நடந்தவை கொடூரமானது. இறந்த குழந்தைகளின் புகைப்படங்களையும், பசியில் துடித்தபடி தொடர்ந்து இடம்பெயரும் மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேதன்யாகுவிடம் பேசியது குறித்து பின்னர் மனம் திறந்த கமலா ஹாரிஸ், காசா மக்கள் படும் துயரம் குறித்தும் இதுவரை பறிபோன அப்பாவி மக்களின் உயிர்கள் குறித்தும் அங்கு நிலவும் மனிதநேய சிக்கல் குறித்தும் எனது கவலையை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.