டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 மில்லியன் டாலர் செலவழித்த எலான் மஸ்க்!!
ட்ரம்ப் , எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ்க்கும் இவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. டொனால்டு டிரம்பிற்கு முதலில் இருந்தே தொழில் அதிபரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்ததோடு, பிரசாரத்தோடு அணிவகுத்து சென்றார். இதனால் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் முக்கிய துறையான திறன் துறைக்கு (Department of Government Efficiency) எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை தலைவராக நியமித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் 270 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்துள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக டிம் மெலன் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியிருந்தார். தற்போது டொனால்டு டிரம்பின் பிரசார நிதிக்கு எலான் மஸ்க் 270 மில்லியன் டாலர் வழங்கி, அதிக நிதி வழங்கிய தனி நபர் என்பதில் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா பிஏசி-க்கு (America PAC) 238 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். இந்த அரசியல் நடவடிக்கை கமிட்டி டிரம்பிற்கு ஆதரவாக நிதி சேகரித்தது. அதேபோல் கருத்தடை தொடர்பான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முன்னெடுத்தார். இது தொர்பான விளம்பரத்திற்கு உதவும் வகையில் 20 மில்லியன் டாலர் கூடுதலாக நன்கொடை வழங்கியுள்ளார். டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியை பார்வையிட எலான் மஸ்க் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று டொனால்டு டிரம்ப் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.