நிழல் உலகின் தனிக்காட்டு ராஜா தாவூத் இப்ராஹிமை கொல்ல சதியா..? - விஷம் வைத்ததால் அலறும் பாகிஸ்தான்

நிழல் உலகின் தனிக்காட்டு ராஜா தாவூத் இப்ராஹிமை கொல்ல சதியா..? - விஷம் வைத்ததால் அலறும் பாகிஸ்தான்

Dawood Ibrahim

இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமிற்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் உண்மையை அறிய என்.ஐ.ஏ.முயன்று வருகிறது.

நிழல் உலக தாதா...மும்பை குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்...இந்தியாவால் தேடப்படும் சர்வதேச குற்றவாளி...உலகளவில் மிகவும் பிரபலமான பணக்கார ரவுடி, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, திரைத்துறையை ஆட்டிப்படைப்பது, தங்கம் மற்றும் வைரம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ரியல் எஸ்டேட் பிசினஸ் என உலகமே திரும்பி பார்க்கும் இத்தனை பெயர்களுக்கும் சொந்தக்காரர் தான் தாவூத் இப்ராஹிம். இவரது தலைக்கு கோடிகளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்கு வராமல் அண்டர்கிரவுண்ட் தாதாவாகவே இருக்கும் இந்த தாவூத் இப்ராஹிம்க்கு விஷம் வைத்ததாக பரவிய செய்தி கடந்த இரண்டு நாட்களாக இணையத்தை மட்டுமில்லாமல், சர்வதேச நாடுகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

இன்று பாகிஸ்தானில் தஞ்சமடைந்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தெற்காசியா என 12க்கும் அதிகமான நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்திருக்கும் தாவூத் இப்ராஹிம் இந்தியாவை சேர்ந்தவர். மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் தாவூத் இப்ராஹிம். இவரது தந்தை இப்ராஹிம் மும்பை காவல்துறையில் தலைமை காவலராக இருந்தவர்.

போலீசாரின் மகனான தாவூத் இப்ராஹிம் பள்ளி படிக்கும்போதே திருட்டு சம்பவத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். சிறுவயதில் திருட ஆரம்பித்த தாவூத் இப்ராஹிம், வளர்ந்ததும் சர்வதேச கொள்ளையனாக மாறியுள்ளார். பாம்பே கேங்ஸ்டர் பாஹூ தாதா என்ற லோக்கர் ரவுடி கும்பலுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தாவூத் இப்ராஹிம் 1970 ஆண்டுக்கு பிறகு தனக்கென தனிக்கூட்டத்தை உருவாக்கி கொண்டார். அதில் தனது சகோதரர் ஷபீர் இப்ராஹிமை இணைத்து கொண்டு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டார்.

எதிரிகளின் துப்பாக்கிச்சூட்டில் தனது அண்ணன் ஷபீர் இப்ராஹிம் கொல்லப்பட்டதை தொடர்ந்து தனிக்காட்டு ராஜாவாக உருவெடுத்தா தாவூத் இப்ராஹிம். பின்னர், தனக்கென டி- கம்பெனியை உருவாக்கி அதன் ஒரே தலைவனாக தனி ராஜ்ஜியத்தை அமைக்க தொடங்கினார் தாவூத் இப்ராஹிம்.

டி- கம்பெனியின் மூலம் தங்கம் கடத்தல், ரியல் எஸ்டே, மாஃபியா, போதை பொருள் கடத்தல், பணம் பறித்தல் வேலைகளில் ஈடுபட்ட தாவூத் இப்ராஹிமை 1986ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக மும்பை போலீசார் அறிவித்தது. அதனால், தாவூத் இப்ராஹிம் துபாய்க்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கியுள்ளார். அங்கு தன்னை மேலும் பலப்படுத்தி கொண்ட தாவூத் இப்ராஹி, 1990களில் டி-கம்பெனியின் பலமடங்கு உயர்த்தினார். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் அல்-கொய்தா என்ற தீவிரவாத அமைப்பு இருந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மாஸ்டர் மூளையாக தாவூத் இப்ராஹிம் இருந்தது தெரிய வந்தது.

இதனால் தாவூத் இப்ராஹிமை இந்தியா தீவிரமாக தேடி வந்தது. அதேநேரம், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது, நிதியுதவி செய்வது போன்ற குற்றங்களிலும் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், தாவூத் இப்ராஹிமை 2003ம் ஆண்டு சர்வதேச குற்றவாளியாக இண்டர்போல் அறிவித்தது.

மும்பை குண்டுவெடிப்புக்கு பிறகு தாவூத் இப்ராஹிம் இந்தியாவுக்கு வராத நிலையில் பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கி இருப்பதாக அவ்வபோது தகவல் வெளியாகி வந்தது. தாவூத் இப்ராஹிம் நிழல் உலக தாதாவாக வலம் வந்த அதேநேரம் மெஹ்ஜபீன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு மகள்கள் மற்றும் மகன் என 4 குழந்தைகளுக்கு தந்தையானார். தனது மகள் மஹ்ரூக்கை முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மகன் ஜுனைத் மியான் தத் என்பவருக்கு தாவூத் இப்ராஹிம் திருமணம் செய்து வைத்தார். தனது மற்றொரு மகளை பாகிஸ்தான் - அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபருக்கு திருமணம் செய்து வைத்தார். மகனுக்கு லண்டனை சேர்ந்த பாகிஸ்தான் தொழிலதிபரான பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தார்.

இதில் தாவூத் இப்ராஹிமின் ஒரே மகனான மோயின் இப்ராஹின், 2017ம் ஆண்டு இஸ்லாமிய மத குருவாக (மௌலானா) மாறியுள்ளார். தந்தை உலகமே அலறும் தாதாவாக வலம் வரும் நிலையில் மோயின் இப்ராஹிம், வன்முற மற்றும் குற்றச்செயல்கள் இல்லாமல் ஆன்மீக வழியில் சென்றிருப்பது ஆச்சர்யம் தான்.

இப்படி குற்றச்செயல்களை வரலாறாக கொண்ட தாவூத் இப்ராஹிமிற்கு அடையாளம் தெரியாதவர்கள் விஷம் வைத்துள்ளதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிமிற்கு கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தாவூத் இப்ராஹிமிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையின் தளத்தில் புறநோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இப்ராஹிமின் டி கம்பெனியின் சர்வதேசச் செயல்பாடுகளை கவனித்துக்கொள்ளும் நெருங்கிய கூட்டாளியான சோட்டா சகீல் தாவூத் இப்ராஹிம் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக தாவூத் இப்ராஹிம் இறந்ததாகவும், அவரது உடல் நலம் குறித்த வதந்திகளும் அவ்வபோது வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் தாவூத் ஏதோ ஒரு காரணத்தால் மரணமடைந்து விட்டதாக செய்திகள் பரவி வந்தன. கடந்த 2016-ல் தசை அழுகல்நோய் காரணமாக தாவூத்தின் இருகால்களும் வெட்டி எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அது வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டில் மாரடைப்பால் தாவூத் உயிரிழந்து விட்டதாகவும் மூளை புற்றுநோயால் அவர் மரணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. கடந்த 2020-ம் ஆண்டில் கரோனாவைரஸால் தாவூத் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. தற்போது தாவூத் இப்ராஹிமிற்கு விஷம் வைக்கப்பட்டதாக வெளியான தகவல் நிழல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story