யுரேனியம் செறிவூட்டல் இடத்தை வெளியிட்ட வடகொரியா; வடகொரிய அதிபர் பார்வை!!
North Korea uranium enrichment
உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வடகொரியா கடும் சவாலாக விளங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அணுஆயுதம்தான். எப்போதெல்லாம் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் போர்ப்பயிற்சி மேற்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து பதிலடி கொடுப்போம் என வடகொரியா அச்சுறுத்தும். அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணுஆயுதம் இருப்பதாக வடகொரியா சொல்லி வருகிறது. எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே சமீபத்தில் அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் பணிகளை இன்னும் துரிதப்படுத்துமாறு கிம் ஜாங் உன் வலியுறுத்திருந்தார். இது வழக்கம் போல் கிம் ஜாங் உன்னின் மிரட்டலாக இருக்கும் என உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்தன. இந்த நிலையில் யுரேனியம் செறிவூட்டல் அதிக அளவில் உற்பத்தி செய்யும் வசதிகளை வடகொரிய அதிபர் பார்வையிடுவது போன்ற படம் வெளியாகியுள்ளது. யுரேனியம் செறிவூட்டல் மையத்திற்கு அவர் தற்போது சென்றாரா? என்பது உறுதியாகவில்லை. என்றபோதிலும் வடகொரிய அணு ஆயுதங்களை அதிக அளவில் பெருக்குவதில் உறுதியாக உள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் முக்கியமானதாகும். இதற்கிடையே அணுஆயுத இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில், இந்த இடத்திற்கு சென்றார் என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை. வடகொரியாவின் தற்பாகாப்பிற்கான அணுஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்பதால், யுரேனியம் செறிவூட்டலை வசதிகளை அதிகரிக்க கிம் ஜாங் உடன் வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே அந்த இடங்களுக்கு சென்றுள்ளார் எனத் தகவல் கூறப்படுகிறது. யுரேனியம் செறிவூட்டல் முதல் அணுஆயுதம் தயாரிப்பது வரை கிம் ஜாங் உன்னுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. யுரேனியம் செறிவூட்டலுக்கான புதிய வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டும். இது அணுஆயுதம் தயாரிப்பதற்கான பொருட்களை உற்பத்தியை செய்வதில் மேலும் வலுவடையச் செய்யும், அணுஆயுத பொருட்களை தயாரிப்பதில் தங்களுடைய நீண்ட காலம் இலக்கை நிர்ணயம் செய்வது அவசியம் என்பதை கிம் ஜாங் உன் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. 2006-ம் ஆண்டு முதன்முறையாக வடகொரிய அணுஆயுத சோதனை மேற்கொண்டது. அப்போது ஐ.நா. வடகொரியாவுக்கு தடைவிதித்தது. அதன்பின் முதன்முறையாக யுரேனியம் செறிவூட்டல் வசதியை வடகொரியா தற்போது வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த இந்த படத்தை பதிவிட்டிருக்கலாம். வரவிருக்கும் அமெரிக்க அரசு வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக்குவது சாத்தியமற்றது என்பதை உணர வைக்க இப்படி செய்திருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எங்களிடம் அணுஆயுதம் உள்ளது என்பதை மற்ற நாடுகளில் அறிந்து கொள்வதற்கான தகவலாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.