காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இலங்கை கடற்படை நடவடிக்கை!!
fishermen
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறை பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக் கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்களை சிறை பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளனர். சமீபத்தில்தான் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.