வங்கியில் வேலை! 500 பணியிடங்கள்! டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்
யூனியன் வங்கியில் 500 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி உள்பட இந்த பணியிடங்கள் பற்றிய விரிவான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக உள்ளது யூனியன் வங்கி. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில், ஏற்படும் பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாவுகவும், நேரடியாகவும் நிரப்பப்பட்டு வருகின்றன.
எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. அந்த வகையில் தற்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூனியன் பேங்க் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் 25 மாநிலங்களில் உள்ள யூனியன் வங்கியில் பயிற்சி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 55 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளாவில் 22 பணியிடங்களும், கர்நாடகாவில் 40 பணியிடங்களும் என மொத்தம் 500 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு. இது பற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்..
சம்பளம் & தேர்வு முறை: அப்ரெண்ட்டீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாதம் ஊதியமாக வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஆன்லைன் டெஸ்ட் மற்றும் உள்ளூர் மொழித்திறன் பற்றிய தேர்வு அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தேவையான கல்வி தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொண்ட பின்னர் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பயிற்சி பணிக்கு https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx- என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம்: தேர்வுக்கட்டணமாக பொதுபிரிவு மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும். பெண்களுக்கு ரூ.600 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.