வாகன விபத்தை கொலை வழக்காக மாற்ற பெண் கைக்குழந்தையுடன் ஆட்சியரிடம் மனு
வாகன விபத்து என பதிவு செய்யப்பட்ட நிலையில் அதனை மறு ஆய்வு செய்து கொலை வழக்காக மாற்றி நீதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் உத்திரமேருர் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண் கை குழந்தை மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஒட்டன்தாங்கல் கிராமத்தில் சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவி பாக்கியலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இவர் மாங்காடு பகுதியில் பணி செய்து வந்த நிலையில் இவருடைய உறவினர்கள் சிலருடன் தகராறு ஏற்பட்டு அது குறித்த புகார்கள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் உத்தரமேரூர் காவல் நிலையங்களில் புகாராக அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணிக்கு சென்று வீடு திரும்புகையில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் உள்ளதாக அவரது நண்பர் மற்றும் மனைவிக்கு தகவல் தெரிவித்து நிலையில், இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரை மீட்ட காவல்துறையினர் அவர் உயிரிழந்தவர்களாக கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.
முருகனின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளதாக மனைவி மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் இதனை சந்தேகம் மரணம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் முருகனின் மனைவி பாக்கியலட்சுமி இன்று தனது கைக்குழந்தையுடன் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து தனது நிலையை எடுத்துக் கூறி இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தார்.
இந்நிலையில் உடற்கூறு ஆய்விலும் அவர் இயற்கை மரணம் அடையவில்லை என தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர், மேலும் அவர்களது உறவினர்கள் ஏற்கனவே முருகனைக் கொன்று விடுவதாக கூறி மிரட்டி வந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதனை முழுமையாக விசாரணை மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
இது குறித்து உத்திரமேரூர் காவல்துறையில் கேட்டபோது, பல்வேறு கோணங்களில் அவரின் மரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் முறையாக விசாரணை நடைபெறும் என தெரிவித்தனர்.