பண்ணையில் பதுக்கப்பட்ட 7 டன் ரேஷன் அரிசி - பறிமுதல் செய்த போலீசார்

சாத்தூர் அருகே கால்நடை பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் இருவரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Update: 2024-02-08 08:03 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்குபட்டி பகுதியில் சிலர் ரேசன் அரிசி கடத்துவதாக புகார்கள் வந்ததையடுத்து, அப்பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ராம ராஜ நாயக்கன் என்பவருக்கு சொந்த மான கால்நடை பண்ணையில் தகர செட்டில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீஸார், பண்ணையில் 178 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்ட 7,120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், ரேசன் அரிசி கடத்தி வர பயன்படுத்திய கார் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநர் ஆறுமுககனி (28) ரேசன் அரிசி சேகரித்து வந்த கார்த்திக் (29) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், ரேசன் அரிசி வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்த பாலமணி கண்டன் மற்றும் ரேசன் அரிசி உரிமையாளர் சங்கிலி பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News